நம்மில் பலருக்கு வித விதமான தபால்தலைகள் சேகரித்து வைக்கும் பழக்கமும் சிலருக்கு வாழ்த்து அட்டைகள் சேகரித்து வைக்கும் பழக்கமும் இருக்கும். சிலர் சாவிக்கொத்துகளை சேகரித்து வைப்பார்கள். சிலர் பிரபலமானவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி - தோழர், தோழிகளின் கையெழுத்துகள் புகைப்படங்கள் என சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். இதெல்லாம் இங்கு எதற்கு சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா?
நான் அப்படி சேகரிக்கும் பொக்கிஷங்களைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே. என் குழந்தை பிறந்ததிலிருந்து இது வரை ஒவ்வொரு வருட முடிவிலும், அந்த வருடத்தில் அவள் அணிந்த அழகான உடைகளை பாதுகாப்பாக எடுத்து வைப்பேன். அவள் பெரியவளாகும் போது இவைகளை காண்பித்தால் இதெல்லாம் நாம் சிறுவயதில் அணிந்தோமா என்று அவளுக்கு வியப்பாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.
இது ஒரு உதாரணம். இவை போன்று அப்பா கொடுத்த 5 ரூபாய் புது நோட்டு; அம்மா கொடுத்த தலைதீபாவளி சீரில் இருந்த 1 ரூபாய் புது நோட்டு; புடவை கட்ட ஆசைப்பட்டு வாங்கிய முதல் புடவை; கணவர் ஆசையாக வாங்கிக் கொடுத்த முதல் சுடிதார்; அவர் எனக்கு எழுதிய கடிதங்கள்; நாங்கள் முதன்முதலாக சென்ற ”ரன்” சினிமாவின் டிக்கெட்; நான் ஒரு குழந்தைக்கு அம்மா ஆகப் போகிறேன் என்று டாக்டர் உறுதி செய்த நாளின் காலண்டர் ஷீட்; அப்பா கையெழுத்திட்டு எனக்கு பரிசளித்த புத்தகங்கள் - இப்படிப் பல பொக்கிஷங்களை நான் சேர்த்து வைத்திருக்கிறேன் [இதுக்கே தனியா ஒரு அறை வேண்டும் போல இருக்கு என்று என்னவர் அவ்வப்போது புலம்புவது தனிக்கதை].
இதைப் படிக்கும் போது உங்களுக்கும் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் பொக்கிஷங்கள் என்னென்ன என்று மனதுக்குள் கொசுவத்தி சுத்த ஆரம்பித்துவிட்டதா?.
மீண்டும் சந்திப்போம்!
ஆதி